பீஜே பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்
ஆக்கம் முஹம்மத் ஆஷிக்
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!
நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும் எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.







