இஸ்லாம் கூறும் குடும்பவியல் (05)

Saturday, December 15, 2012


உரை
பீ ஜெய்னுல் ஆபிதீன் 
எழுத்து வடிவில்
முஹம்மது கைஸான் (தத்பீகி)

குடும்ப அமைப்பில் ஏற்படும் நன்மைகள்

  1. குடும்ப உறவினர்களின் உதவி கிடைத்தல்

குடும்பமாக இருக்கிறோமே அதில் பலவித நன்மைகள் இருக்கின்றன. அல்லாஹ் அமைத்த இந்த குடும்ப அமைப்பில் உடலுக்கு, மனதுக்கு, சமூகத்துக்கு நன்மைகள் இருக்கின்றன.
ஆகமொத்தத்தில் எல்லா நன்மைகளும் கலந்து குடும்பம் என்பதில் தான் இருக்கிறது.
குடும்பம் என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து ஆரம்பிக்கும், கணவன் மனைவி தான் அதன் தொடக்கமாக இருப்பார்கள்.
பின்பு கணவனாக இருப்பவன் தந்தையாகவும், மனைவியானவள் தாயாகவும் மாறுவார்கள். எனவே உறவு முறைகள் கூட இந்த குடும்பம் என்பதின் மூலம் தான் உருவாகும்.
அது மாதிரி இவ்விருவரின் தாய் தந்தையர்கள், சகோதர சகோதரிகள் போன்றோர் பல்வேறுபட்ட உறவுமுறைகளைப் பெறுகின்றனர். எனவே குடும்பம் மூலமாக ஒரு சமூகம்,கோத்திரம் உருவாகின்றது. இதனால் மனிதனுக்கு அவனது நெருக்கடியான கட்டத்தில் பக்கபலமாக இந்த உறவினர்கள் இருப்பார்கள்.


ஏதாவது பிரச்சினைகள் வரும்போது வேறு எவரும் உதவி செய்ய வருவார்களோ இல்லையோ அவர்களது சகோதர சகோதரிகள் முன்வருவார்கள் இல்லையா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள். தம்பி இருந்தால் தானே அவன் படையைக் கண்டால் கூட பயப்பட மாட்டான். ஏனென்றால் அண்ணனுக்கு பிரச்சினை என்றால் தம்பி துடிப்பான், தம்பிக்கு கஷ்டம் என்றால் அண்ணன் துடிப்பான். இந்த மாதிரி ஒருவொருக்கொருவர் பக்கபலமாக இருக்கின்ற உறவு முறை எதனால் கிடைக்கின்றது என்று பார்த்தால் குடும்பம் என்ற அமைப்பில் நுழைந்தால் தான் கிடைக்கும்.

குடும்பம் இல்லாத முறையில் இந்த உடல் ரீதியான உணர்வு வரும் போது  மாற்று வழியில் (ஓரினச்சேர்க்கை, கட்டுப்பாடுகளற்ற முறை) சென்றவனுக்கு உறவினர்கள் இருப்பார்களா? இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த உறவினர்களுடன் பாசத்தோடு பழகுகின்ற இன்பம் கிடைக்காது. அவன் உணர்ச்சி வேகத்தில், இளமை முறுக்கில் தவறான வழியில் சென்று முதுமையில் அநாதையாகவும், தனியாகவும், நோயையும் வாங்கிக்கொண்டு      இருக்க வேண்டி வரும். கடைசியில் ஒரு கட்டத்தில் என்னவாகுவான் என்றால் அவனுக்கு பக்கபலமாக யாருமே இருக்க மாட்டார்கள். அவன் மட்டுமே இருப்பான். அவனுக்கென்று ஒரு சமூகமோ, கூட்டமோ, கோத்திரமோ இருக்காது.

எல்லோரும் எல்லோருக்கும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள். ஒரு நெருக்கம் இருந்தால் தான் உதவி செய்வார்கள். எனக்கு ஒருவர் உதவி செய்கிறார் எனில் அவர் எந்த விதத்திலாவது எனக்கு தொடர்பில் உள்ளவராக அல்லது உறவினராக இருக்க வேண்டும். குடும்பம் என்ற அமைப்புக்குள் நுழைந்தால் தான் இவையனைத்தும் கிடைக்கும்.

விவரம் கெட்டுப்போய் சிலபேர் சுதந்திரம் என்ற பெயரில் குடும்ப வாழ்க்கையை சீரழிக்கின்ற விதமான நாடகங்கள், சினிமாக்களை எடுத்து தீய கருத்துருவாக்கத்தை உருவாக்குகி அறியாத மக்களுக்கும் கேடு செய்கின்றான். விளங்காமல் தப்பான முடிவெடுப்பவனுக்கு கேடு செய்து அவனது முதுமையில், தள்ளாத வயதில், கஷ்டமான நேரத்தில் அவனை அம்போ என்று நிப்பாட்டுவதற்குத் தான் இந்த சித்தாந்தங்கள் உதவுகின்றன. குடும்ப அமைப்பிலேயே உறவினர்கள் கிடைக்கின்றனர். எனவே இவற்றை கட்டிக்காக்க பாடுபட வேண்டும். குடும்பத்தை சிதைத்துவிடக் கூடாது.

  1. மனித குல பெருக்கம் ஏற்படல்

குடும்பம் என்ற அமைப்பு இருந்தால் தான் மனித குலம் பெருக முடியும். மனுதகுலம் பெருகினால் தான் முன்னேற்றம் ஏற்படும். மக்கள் தொகை அதிகரிக்காமல் இருந்தால் இப்போது நாம் அனுபவிக்கின்ற பல நவீன விடயங்களை அனுபவிக்க முடியுமா? மக்கள் தொகை பெருக்கத்தால் தான் கண்டுபிடிப்புகளும் அதிகமாயின. மக்கள் தொகை குறைவாக இருப்பின் கண்டுபிடிப்புகளை மேற்கொள்பவனுக்கு நஷ்டமே ஏற்படும். அவற்றை வாங்குபவரின் தொகை அதிகரித்தால் தான் இலாபம் பெற இயலும்.

உதாரணத்திற்கு ஒரு ஊரில் பத்து பேர் தான் இருக்கின்றார்கள் எனில் கண்டுபிடிக்கப்பட்ட பஸ்ஸில் பயணம் செய்ய எவர் போவார்? ஓரிரண்டு பேர் செல்வதற்கு பஸ் நடத்துனருக்கு நஷ்டம் தான் ஏற்படும். சனப்பெருக்கம் கூடினால் தான் பஸ்களும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு மக்கள் பயணிக்கவும் இலகுவாக இருக்கும். அதே போன்று மைக் எதற்கு கண்டுபிடிக்கப்பட்டது? ஓரிரண்டு பேர் கேட்பதற்கு மைக்கே தேவையில்லை. சனப்பெருக்கம் அதிகமாக அதிகமாகத் தான் தேவைகளும் பெருகி அதற்கேற்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. எனவே குடும்பம் இல்லையென்றால் இந்த மனித வளம் கிடைத்திருக்காது.

  1. கணவன், மனைவிக்கு மத்தியில் ஏற்படும் ஒழிவு மறைவின்மை

கணவன், மனைவி இருவருக்கிடையில் உடல் ரீதியான தொடர்பு இருப்பதன் காரணத்தால் அவர்களிடையே எந்த வித ஒழிவு மறைவும் இருக்காததும் குடும்ப அமைப்பினால் கிடைக்கும் ஒரு நன்மையாகும். எனவே ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் அதிகமாக ஈடுபாட்டுடன் நடந்து கொள்கிறார்கள். கணவனுக்கு தலைவலி ஏற்பட்டால் மனைவி துடிதுடிக்கிறாள், மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டால் கணவன் துடிதுடிக்கிறான். இதற்கெல்லாம் காரணம் குடும்பம் என்ற அமைப்பினால் ஏற்படும் அன்பினால் ஆகும்.

  1. ஒருவருக்கொருவர் தியாகம் செய்தல்

குடும்ப அமைப்பில் உள்ள அனைவரும் தியாகம் செய்கின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு கஷ்டம் வரும்போது தனக்கு தேவையிருந்தாலும் கூட கஷ்டம் உள்ளவரைக் கவனிப்பதும் இந்த குடும்ப அமைப்பில் தான். மனைவியானவள் சமைத்த உணவை தனது பசியை அடக்கிக்கொண்டு கணவனுக்கும், தாயானவள் தனது குழந்தைகளுக்கும் அர்ப்பணிப்பதைக் குடும்ப அமைப்பில் காணலாம். சுயநலம் குறைந்தவர்களாக அனைவரும் இருப்பார்கள். எனவே சம்பாதிப்பதன் மூலம் ஒருவன் தனது குடும்பத்தைக் கவனிக்கிறான். இவையனைத்தும் குடும்பம் என்ற ஒன்றின் மூலமே ஏற்படுகின்றது. இப்படி தனக்காக தனது குடும்பத்திற்காக சம்பாதிப்பதை சுயநலம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் குடும்பத்திற்காக தான் ஒவ்வொருவரும் மேலும் மேலும் பணத்தை சம்பாதிக்கின்றார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் கூட கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அனுப்புவதும் தமது குடும்பத்திற்காகவே ஆகும். எனவே ஒருவொருக்கொருவர் செய்து கொள்ளும் தியாகத்தை குடும்பம் என்ற அமைப்பில் காணலாம்.

எனவே குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியேறியவனுக்கு சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது. அவன் தன்னுடைய சுகத்தையும், நலத்தையும் மட்டுமே கவனிப்பவனாக இருக்கிறான். எந்தவித சமூக அக்கறையும், தியாக மனப்பான்மையும் இல்லாதவனாக மாறிவிடுகின்றான்.

  1. இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவிக்கு கிடைக்கும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான நன்மைகள்

இந்த குடும்ப அமைப்பில் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான நன்மைகளும் இருக்கின்றன. கணவன், மனைவி இருவரும் அந்நியோன்னியமாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பார்களேயானால் அவர்களுக்கு ஒழுங்கான இல்லற வாழ்க்கை கிடைக்கும். முழு உடம்பும் ஈடுபடக்கூடிய ஒரே ஒரு வேலை இந்த இல்லறமேயாகும். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது தான் உடம்பில் உள்ள அணுக்கள் அனைத்தும் வேலை செய்கின்றன. ஒவ்வொரு வேலைகளையும் செய்யும் போதும் அதற்கு சம்பந்தப்பட்ட உறுப்புக்கே வேலை இருக்கும். ஆனால் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மாத்திரம் ஒட்டுமொத்த உடம்பின் அணுக்களும் ஈடுபடுகின்றன. அதனால் தான் ஒரு மனிதனுக்கு பிறக்கக் கூடிய குழந்தை அச்சசலாக அவன் மாதிரியே இருக்கின்றது. அந்த உயிரணு உடலின் எல்லா பகுதிகளில் இருந்தும் சேர்க்கப்பட்டு கருவுக்குள் செலுத்தப்படுகின்றது. சில சமயங்களில் குழந்தையின் சாயல் பெற்றோரிலிருந்து வேறுபடலாம். காரணம் இரண்டு பேருடைய ஜீன்களும் கலந்துள்ள படியால் ஆகும். ஆகவே முழு உடம்பும் இயங்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இந்த தாம்பத்தியத்தில் தான் ஏற்படுகின்றது.


  1. மூளையின் திறன் அதிகரித்தல்
இந்த இல்லற வாழ்க்கையில் ஒழுங்கான முறையில் ஈடுபட்டு சந்தோஷம் அடைவார்களேயானால் முதலாவதாக கிடைக்கக் கூடிய நன்மை மூளையின் திறன் அதிகரிப்பதாகும். இதனை எலிகளைக் கொண்டு நடாத்திய ஆராய்ச்சியில் இருந்து கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்காவில் பல குழுக்களாக ஒரே மாதிரியான, ஒரே வயதுடைய  
சில எலிகளைத் தனியாகவும், சில எலிகளைப் பெண் எலிகளோடு சேர்த்தும் தங்க வைத்து அதிலும் ஆண், பெண் எலிகளை ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு சேர வைத்து ஆராய்ச்சி செய்த முடிவில் ஆண், பெண் ஜோடியாக, சுதந்திரமாக சேர்கின்ற எலிகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கின்றது, சுறுசுறுப்பாக  செயல்படுகின்றது என்பதை கண்டுபிடித்துள்ளார்கள். சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு ஹோமோன்கள் சுரந்து மூளையை விரிவு படுத்துவதற்கு, மூளையின் திறனை அதிகரிப்பதற்கு இந்த தாம்பத்தியம் உதவுவதாக கண்டுபிடித்துள்ளார்கள். எனவே இவை குடும்ப அமைப்பின் மூலம் தான் ஏற்பட முடியும். பெண்களில் சிலரிடம் திருமணமாவதற்கு முன் இருந்ததை விட பேச்சில் அதிக தெளிவு இருப்பதை திருமணத்தின் பின்னர் காணலாம். எனவே இல்வாழ்க்கையின் மூலம் மூளைக்கு அதிக தெளிவு, விருத்தி ஏற்படுத்துவதும் ஒரு நன்மையாகும்.

  1. உடலில் ஏற்படும் நன்மைகள்
கொழுப்பு சத்து அதிகமாக உள்ள ஒருவர் ஒரு மணித்தியாலத்திற்கு நடப்பதனால் 300 கலோரி அல்லது 500 கலோரி பெறுமானமுள்ள கொழுப்பைக் குறைத்துக் கொள்ளலாம். இதனால் கை, கால், இதயம் போன்ற உறுப்புகளுக்கு தான் வேலை இருக்கும். ஆனால் தாம்பத்தியத்தில் முழு உடம்பும் இணங்குவதால் அதிகமான கலோரிகள் இழக்கப்படுகின்றன. இதனால் கொலஸ்ட்ரோல் பிரச்சினை ஏற்படாது.

அதிகமான கலோரிகள் இல்லறத்தில் ஈடுபடும் போது எரிக்கப்படுவதால் கொழுப்புச்சத்து குறைந்து இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் சாதாரண நிலையில் இருக்கும். எனவே டென்ஷன் குறையும், மனஅழுத்தம் இல்லாமல் போகும். மனஅழுத்தம் ஏற்பட மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன. ஒருவர் ஆத்திரமடையும் போதும் கோபம் அடையும் போதும் டென்ஷன் ஆவார். அதே போன்று உடம்பில் ஏற்படுகின்ற உபாதைகளாலும் மனஅழுத்தம் ஏற்படும். ஆகவே பிரச்சினைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் போது மனஅழுத்தமும் உண்டாகின்றது. ஆகவே தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உடல் ரீதயான அனைத்து கொழுப்புகள், அடைப்புகள், கழிவுகள் நீக்கப்படுகின்ற காரணத்தால் மனஅழுத்தம் இல்லாத அமைதியான நிலையை மனிதன் அடைகின்றான் என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளார்கள். எனவே இரத்த அழுத்தம் சீராகின்ற நன்மையும் இல்லறத்தின் மூலம் கிடைக்கின்றது.

இல்லறத்தில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற வியர்வையும் மற்ற வேலைகளில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற வியர்வையும் வித்தியாசப்படுகின்றது என்கிறார்கள். இல்லறத்தின் போது ஒட்டுமொத்த உடம்பின் அனைத்துப் பகுதியிலிருந்தும் உப்புக்களும், நச்சுப்பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன. எனவே சுத்தமான ஒரு நிலையை மனிதன் அடைகின்றான். தாம்பத்தியத்தை ஒழுங்கான முறையில் மேற்கொண்டால் நன்றாக தூக்கம் வரும், நிம்மதி ஏற்படும்.

உடற்பயிற்சி விளையாட்டுகளில் ஈடுபடும் சிலருக்கு விளையாட்டுச் சிந்தனையிலேயே மட்டும் அதிகம் ஈடுபடுபவர்களால் ஒழுங்காக விளையாட முடிவதில்லை என்றும் அதற்குக் காரணம் தம்பதியினர் பிரிந்து இருப்பது தான் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். மாதக்கணக்கில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால் உடலை மட்டுமே கவனிக்கின்றமையாலும் வேறு சிந்தனையில்லாமையினாலும் ஒழுங்காக விளையாட்டு வீரர்களுக்கு விளையாட முடிவதில்லை என்றும் கூறியுள்ளார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுபவர்களை பரீட்சித்துப் பார்த்ததன் விளைவாக அவர்கள் ஒழுங்கான முறையில் விளையாடாமைக்கு காரணம் அவர்கள் தமது ஜோடியைப் பிரிந்து இருப்பதனால் தான் என்பதை கண்டுபிடித்துள்ளார்கள். அவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டால் சக்தி போய்விடும் என்று தப்பாக கூறப்பட்டதால் அவர்களுக்கு விளையாட்டில் ஒழுங்காக ஈடுபட முடியவில்லை. எனவே விளையாட்டில் ஈடுபடுவதோடு தமது ஜோடியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டுக்கொண்டும் இருப்பவர்களது செயற்திறன், வீரம் அதிகரிக்கின்றது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிரைப் பணயம் வைக்கும் போர்க் களங்களுக்குச் செல்லும் போது மனைவியையும் கூட்டிக் கொண்டு தான் சென்றிருக்கிறார்கள். அப்போது தான் டென்ஷன் இல்லாமல் போர்  செய்ய முடிந்தது. அந்த நேரத்தில் கூட சந்தோஷமான மனநிலையுடன் இருந்தால் தான் போருக்கான நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் செய்ய முடியும், மூளையும் ஒழுங்காக வேலை செய்யும். இல்லாவிடின் உடம்பு ஒரு இடத்திலும் மனது இன்னொரு இடத்திலும் இருந்தால் செய்யும் காரியத்தில் முழுமூச்சாக ஈடுபட முடியாது. யுத்த களமாக இருந்தாலும் சந்தோஷமான மனநிலையில் இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒரு மனைவியை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் சென்றுள்ளார்கள். இது மாதிரியான பல நன்மைகள் இந்தக் குடும்ப வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்றன.
இறைவன் நாடினால் தொடரும்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger