Thursday, September 29, 2011


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (03)




உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை


ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பாலியல் விஷயத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற முறையாகும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண் எத்தனை பேருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இது எங்களது உரிமை, சுதந்திரம், யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்ற முறையாகும். இந்த மாதிரி எல்லோரும் போனால் குடும்பம் எப்படி இருக்கும்? கணவன், மனைவி என்ற உறவு இங்கு இல்லாதிருக்கும் வாழ்க்கையில் குழந்தைகளுக்கு யார் பொறுப்பு? சமூகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழலாம் என்ற சித்தாந்தமும் இன்று உலகில் வந்துள்ளது. இந்த நவீன யுகத்திலே நீதிபதிகள் இதற்கு அங்கீகாரமும் அளித்துள்ளனர்.

திருமணம் என்றால் ஒரு பொறுப்பை சுமக்கிறோம் ஆனால் இந்த முறையில் பொறுப்பை சுமக்கத் தேவையில்லை. திருமணம் எனும் அமைப்பில் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் தியாகங்கள் செய்து வாழ்கின்ற அழகான குடும்ப அமைப்பை நாசமாக்குகின்ற ஒரு முறை தான் இந்த கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை ஆகும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கட்டுப்பாடில்லாத சுதந்திரமானது ஆண் பெண் விஷயத்தில் எந்த சட்டமும் இருக்கக் கூடாது என்று இருக்கிறது. நாட்டில் உள்ள நீதிபதிகளே இவ்வகையான முறைகேடான வாழ்க்கை முறைக்கு எந்தப்பிரிவில், சட்டத்தில் அவர்களைக் கைது செய்வது என்று கேட்கிறார்கள். எனவே நாட்டிலேயே இதற்கு எந்தவித தடையும் கிடையாது.

ஆனால் சட்டத்தை விட சட்டத்தைக் காப்பாற்றுகிறவர்களை விட பொது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே எல்லோருக்கும் இந்த நடைமுறையில் விருப்பமில்லை என்பதை அறியலாம். ஆனால் சட்டமோ கட்டுப்பாடுகளின்றி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிறது. நிர்ப்பந்தம், பலாத்காரம் தான் பண்ணக்கூடாது ஆனால் ஆணும் பெண்ணும் விரும்பினால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கின்றது சட்டம். உலக நாடுகளில் பல நாடுகளில் இது தான் சட்டமாக உள்ளது. ஆனால் மக்கள் அனைவரும் இச்சட்டத்தைக் கடைப்பிடிக்க தயாராக இல்லை. மக்கள் வெறுக்கின்றார்கள். ஒரு சிலரின் விருப்பத்திறகாக வேண்டி கேடுகெட்ட இந்த வாசலை திறந்து வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிலைமையில் அனைத்து மக்களும் இருந்தால் என்னவாகும்? குடும்பம் என்று ஒன்று இருக்காது. இதில் அதிகமான பாதிப்பு பெண்களுக்கு ஏற்படும். இந்த மாதிரி கொஞ்ச நேர சந்தோஷத்துக்காக உறவு கொண்டு குழந்தை உருவாகி, அதை சுமந்து அதற்குப் பிறகு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை தான் உண்டாகும். பெண்கள் தங்களது கைகளைக் கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்படும். பெண்களின் பலயீனத்தைக் கொண்டு தான் குடும்ப அமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது மாதிரி கட்டுப்பாடு இல்லாத நிலைக்கு பெண்களும் போக ஆரம்பித்தால், ஆதரித்தால் இதனுடைய கேடு, உடம்பில் வழுவிழந்து முதுமையான நிலைக்கு போகும் போது தான் தெரியவரும். அந்த நேரத்தில் விளைவுகளின் சுமைகள் சுமக்க முடியாமல் பாரதூரமான கஷ்டத்துக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.

இது போக எயிட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் மூலம் பாரதூரமான விளைவை இந்த கட்டுப்பாடுகளற்ற உறவுமுறை தோற்றுவிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கப்பட்டு முடிவாக மரணத்தை ஏற்படுத்தும். எயிட்ஸ் நோயானது தகாத உறவின் மூலம் அதாவது அதிகமான ஆண்களுடன் ஒரு பெண் உறவு கொள்ளும் போது ஏற்படுகின்றது. எயிட்ஸ் தொற்றக் கூடிய வாய்ப்பு பெண்களுக்கே அதிகமாக உள்ளது. எனவே பெண்கள் உடல் உறவு சுதந்திரத்தை பயன்படுத்தினால் அதன் விளைவு எயிட்ஸ் தான். எனவே எயிட்ஸ் உள்ள பெண்ணிலிருந்து அவளுடன் உறவு கொள்ளும் ஆண்களுக்கும் அது பரப்பப்படுகின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற விளம்பரமானது ஒருத்திக்கு ஒருவன் என திருத்தப்பட வேண்டும்.

அரபு நாடுகளில் ஒரு ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்கின்றான். ஆனால் எயிட்ஸ் வருவதில்லை. ஆணுக்கு நான்கு பெண்களுடன் உறவு வைத்தால் எயிட்ஸ் நோய் வராது. ஆனால் பெண்ணுக்கு நான்கு கணவன்மார்கள் இருந்தால் எயிட்ஸ் நோய் வந்துவிடும். இந்த வாசகத்தை இவர்கள் விளங்கிக்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே கட்டுப்பாடற்ற, ஒழுக்கமற்ற இந்த உடலுறவு சுதந்திரத்தை வழங்கினோமேயானால் அதன் விளைவு எயிட்ஸ் நோயை உண்டாக்குவது தான். மேலைநாடுகளில் பாதுகாப்பான உறவு முறை என கடைப்பிடித்து இதனைக் குறைத்துக் கொண்டார்கள். அதாவது ஆணுறைகளைப் பயன்படுத்தி இந்த எயிட்ஸை குறைத்திருக்கின்றார்கள். உலகத்திலேயே எயிட்ஸ் நோய் அதிகமாக ஆபிரிக்காவிலும் அடுத்து இந்தியாவிலுமே உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகம் ஆகும். எனவே இந்த மாதிரியான கேடுகெட்ட சுதந்திரம் மூலம் வரக்கூடிய விளைவை தடுக்க வேண்டும் எனில் சட்டம் போட வேண்டும். கட்டுப்பாடற்ற இந்த பாலியல் உறவால் குடும்பம் என்பது இல்லாமல் ஆகிவிடும். இதனால் வாரிசுகள் கூட அற்றுப் போய் விடும். இந்த மாதிரியான உறவுகளை விரும்புபவர்கள் எயிட்ஸில் இருந்து தப்பிப்பதற்கு கணவன் மனைவியாக வாழுங்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு பாதுகாப்பாக தப்பு பண்ணுங்கள் என்று சொல்கிறார்கள். அரசாங்கத்தின் விளம்பரத்தில் கூட பாதுகாப்பாக உறவு கொள்ளுங்கள் என்று தான் உள்ளது. இப்படி உலகில் உள்ள அனைவரும் கட்டுப்பாடற்ற உறவை பாதுகாப்பான முறையில் மேற்கொண்டால் உலகில் வாரிசே உருவாகாது. எல்லோரும் துறவரம் மேற்கொள்வது போன்று எல்லோரும் இத்தகைய கட்டுப்பாடற்ற உறவு கொண்டாலும் அதுவும் மனித குலத்தை அழித்துவிடும். ஒட்டுமொத்த உலகத்தை அழிக்கும் ஒரு சித்தாந்தமாக இந்த கட்டுப்பாடற்ற உறவு கொள்ளும் முறையும் இருக்கிறது.    


ஓரினச்சேர்க்கை


ஒரு ஆண் ஒரு பெண்ணோடு தான் உறவு கொள்ள முடியும். அது தான் இயற்கை. அப்படித்தான் அல்லாஹ் படைத்திருக்கின்றான். இதை உடைத்துவிட்டு ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என்ற ஓரினர்சேர்க்கை என்ற வழிமுறை கையாளப்படுகின்றது. இதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்குமளவுக்கு உள்ளது. இந்த ஓரினச்சேர்க்கையை சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்று கூட போராட்டங்கள் நடத்துகின்றனர். இதுவும் எல்லோரிடையேயும் பரவினால் இதன் விளைவு என்னவாகும்? முன்னர் கூறிய அதே முடிவு தான், மனித குலம் அழிந்து போய்விடும். இந்த மாதிரி பழக்கத்துக்கு ஆளான ஒருவரது முதிய வயதில் அவரைக் கவனிக்கக் கூட வாரிசுகள் இருக்காது. ஒரு ஆணுக்கு ஆண் துணையாக இருந்தால் ஒருவொருக்கொருவர் சேவை செய்து கொள்ள மாட்டார்கள். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் துணையாக இருந்தால் தான் ஒருவொருக்கொருவர் ஒத்தாசையாக வாழ முடியும். பாலியல் வேறுபாடானாது சேவை செய்ய தூண்டும். இது இயற்கையான நடைமுறையாகும். ஆனால் இந்த ஓரினச்சேர்க்கையை தூண்டக்கூடிய வகையில் படங்கள், செய்திகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என போய்க்கொண்டிருக்கின்றன. இப்படியான ஓரினச்சேர்க்கையும் குடும்ப வாழ்க்கையை நாசமாக்கிவிடும்.

இந்த மாதிரி நடத்தையுடைய சமுதாயத்துக்கே அல்லாஹ் ஒரு நபியை அனுப்பி இருக்கின்றான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை விபச்சாரத்தையும், ஓரினச்சேர்க்கையையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த மாதிரியான சிந்தனை வந்தால் குடுமபத்துக்கு துரோகம் செய்பவர்களாகத்தான் வாழ முடியும். இவற்றை தனியே ஆதரித்து செய்யும் ஒரு பிரினர் ஒரு புறம் இருக்க குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இந்த விபச்சாரத்திலும், ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இது மிகவும் அபாயகரமான ஒரு காரியமாகும். முதல் நபியின் காலத்திலேயே இந்த ஓரினச்சேர்க்கை வந்தது என்று சொல்வார்கள். அது பொய்யான செய்தியாகும். இஸ்லாத்தின் பார்வையில் ஆதி மனிதனிடம் இது இருக்கவில்லை. இப்பழக்கம் இயற்கையாக வந்தது கிடையாது. எவனோ ஒருவன் கொண்டு வந்த வழிமுறை தான் இந்த ஓரினச்சேர்க்கை ஆகும். இத்தகைய பழக்கமுடைய சமுதாயத்திடம் லூத் நபி அவர்கள் “உலகத்தில் உங்களுக்கு முன்னர் யாரும் இதை செய்ததில்லை” என்று கூறுகிறார்கள். எனவே லூத் நபியின் சமுதாய மக்கள் தான் முதன் முதலாக உலகத்தில் இத்தகைய ஈனச்செயலை செய்தார்கள். எனவே ஆதிகாலத்தில் இருந்து ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் விரும்பக்கூடியவர்களாகவே வாழ்ந்து கொண்டு வந்தார்கள். ஆதம் (அலை), ஹவ்வா (அலை) என்று தான் அல்லாஹ் படைத்தான். அவர்களில் இருந்து தானே மனிதர்கள் பல்கிப்பெருகினார்கள். இந்த சீரான அமைப்பு லூத் நபியின் காலத்திலேயே உடைகிறது. இதற்கு அல்லாஹ் எத்தகைய தண்டனையை வழங்கினான் என்றால் அந்த ஊருடைய மேல் பகுதியை கீழ்ப்பகுதியாக ஆக்கினோம், அவர்கள் மீது கல்மாரியைப் பொழிந்தோம், அவர்களின் கண்களைக் குருடாக்கினோம் ஆகிய மூன்று தண்டனைகளை அல்லாஹ் இந்தச் செயல் காரணமாக வழங்கினான்.

அல்லாஹ்வுக்கு வெறுப்பான இந்தக் காரியத்தைத் தடுக்க ஒரு நபியை அனுப்பி இந்தக் கடுமையான தண்டனையைக் கொடுத்து தனது கோபத்தைக் காட்டுகிறான்.

ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين (80) إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون (81

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள்? என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். (அல் குர்ஆன் 7 - 80)

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள் (என்றும் கூறினார்) (அல் குர்ஆன் 7- 81)


உலகிலேயே இந்த இழி செயலை செய்தவர்களில் முதல் கூட்டம் இவர்கள் தான். இதற்காகத் தான் அந்தக் கூட்டத்தையே இறைவன் அழித்ததாக தனது திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود

நமது கட்டளை வந்த போது அவ்வுரின் மீது சுடப்பட்ட கட்களால் கல் மழை பொழிந்து அதன் மேல் பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.
(அல் குர்ஆன் 11-82)

எனவே இந்த ஓரினச்சேர்க்கையானது பாரதூரமான, பயங்கரமான ஒரு குற்றம். குடும்பத்தையும் நாசமாக்கி, அல்லாஹ்விடத்திலும் தண்டனையைப் பெற்றுத்தரும் செயலாக உள்ளது. அல்லாஹ் இதைத் தடுத்தும் இதனைக் கைவிடாத காரணத்தால் அல்லாஹ்வோடு யுத்தம் செய்ததாகத் தான் அமையும். இந்த ஓரினச்சேர்க்கை கூட எயிட்ஸ் உண்டாக காரணமாக அமைகின்றது என்பதை இப்போது கண்டுபிடித்துள்ளனர். ஒரு பெண் பல ஆண்களோடு உறவு கொண்டாலும் எயிட்ஸ் உண்டாகும், மலப்பாதையில் உறவு கொண்டாலும் எயிட்ஸ் உண்டாகும். இந்த காலத்தில் இத்தகைய கேடுகளுக்கு எயிட்ஸ் என்ற நோயை வழங்குவதன் மூலம் அல்லாஹ் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளான்.

1. துறவரம் மீது நாட்டங்கொள்ளக் கூடாது. துறவரம் செய்பவர்களை நல்லவர்கள் என்று எண்ணி விடக்கூடாது.

2. கட்டுப்பாடற்ற உறவு முறையை எதிர்த்து கடுமையாக பேச வேண்டும்.

3. ஓரினச்சேர்க்கையின் பாரதூரத்தையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.

அத்துடன் இவற்றால் ஏற்படும் கேடுகள் மற்றும் மறுமையில் ஏற்படும் தண்டனைகள் போன்றவற்றை எடுத்துக் கூறவேண்டும்.   

இன்ஷா அல்லாஹ் தொடரும்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger