Sunday, July 24, 2011


இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்வதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாத் போராடாமல் இருப்பது ஏன்?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வு வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைப்பின் தலைவர் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் அளித்த பதிலை அப்படியே வெளியிடுகிறோம்.
ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம்.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு குட்டி நாடு. இந்தியாவுடன் மோதிப்பார்க்க அந்த நாட்டுக்குப் பலமோ துணிவோ கிடையாது. இந்திய மீனவர்களைச் சட்ட விரோதமாகப் புகுந்து பிடித்துச் செல்லும் வலிமையோ இலங்கை அரசுக்குக் கிடையாது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொண்டால் தான் தமிழ் மொழியைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரின் போலித்தனம் புரியும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தரை வழியில் எல்லைகள் உள்ளது போல் கடலிலும் எல்லைகள் உள்ளன. இந்தக் கடல் எல்லைகள் இரு வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாடு தன்னை ஒட்டியுள்ள கடலில் 22.2 கிமீ தூரத்தை தனது எல்லையாக வைத்துக் கொள்ளலாம். அந்த எல்லை அந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதியாகும். இந்த எல்லைக்குள் அந்நிய நாட்டவர் நுழைந்தால் அது சட்ட விரோத அத்துமீறலாகும்.  அந்தக் கடல் எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதி பெற்றே யாரும் பிரவேசிக்க முடியும். 22.2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடல் பரப்பு யாருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் அந்த வழியாகக் கடந்து செல்லலாம். இது முதல் வகையான எல்லை.
ஒரு நாட்டை ஒட்டியுள்ள கடலில் 393 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வளங்கள் அனைத்தும் அந்த நாட்டுக்கே சொந்தமானதாகும். அந்நிய நாட்டவர்கள் அங்கே எண்னெய்க் கிணறுகள் தோண்டுவதோ அங்கு தளம் அமைப்பதோ கூடாது. கடந்து செல்லும் வழியாக மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இரண்டாவது வகை எல்லையாகும். இரு நாடுகளிடையே பிரச்சனை ஏற்படாதிருக்க இது போன்ற விதிகள் அவசியமானவை என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் பரந்து விரிந்த கடல் பரப்பில் தான் 22.2 கிமீட்டர் தூரத்தையும், 393 கிமீட்டர் தூரத்தையும் ஒரு நாடு தனதாக்கிக் கொள்ள முடியும். இரு நாடுகளிடையே உள்ள கடல் பரப்பு குறைவாக இருந்தால் அப்போது இந்த சர்வதேச விதியைச் செயல்படுத்த முடியாது. இதற்கு உதாரணமாக இந்தைய இலங்கை கடல் எல்லையை எடுத்துக் கொள்ளலாம். 

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மொத்த கடல் எல்லையே 30 கிமீட்டர் தான். எந்த நாடும் 22.2 கிமீட்டர் தூரத்தை எடுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற நாடுகள் தமக்கிடையே பேச்சு வார்த்தை நடத்தி தங்கள் எல்லையைப் பேசி நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இணக்கமான நிலை ஏற்படாவிட்டால் சர்வதேச நாடுகளின் துணயுடன் அல்லது ஐநா சபை மூலம் எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

புலிகளின் பிரச்சனை இல்லாத காலகட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் தமது கடல் எல்லை குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியர்கள் இலங்கையின் தரைப்பகுதி வரை சாதாரணமாகச் சென்று வந்தனர். எண்ணற்ற தமிழர்கள் கள்ளத்தோணி வழியாக இலங்கை சென்று அங்கே பலகாலம் இருந்து விட்டு கள்ளத்தோணி வழியாக இந்தியாவுக்கும் வருவார்கள்.

ஆனால் புலிகளின் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் தமிழகம் வழியாக புலிகள் ஊடுறுவினால் தனது நாட்டுக்கு ஆபத்து என்று அஞ்சிய இலங்கை அரசாங்கம் கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தி வந்தது. இதன்படி 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமாரக இருந்த போது இரு நாடுகளும் பேசி இவை தான் தங்களின் கடல் எல்லை என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் தான் இது போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பித்தன.

தமிழக மீனவர்கள் வழக்கம் போல் இலங்கை வரை சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அடிக்கடி இலங்கை எல்லக்குள் இந்திய மீனவர்கள் செல்வதும் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்கும் செல்வதும் நடக்க ஆரம்பித்தன. இரு நாட்டுக் கடற்படையும் ரோந்துப் பணியில் இருப்பதால் தங்கள் எல்லக்குள் வரும் அந்நிய நாட்டவரைக் கைது செய்வதை சட்டப்படி யாரும் குறை கூற முடியாது. இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்கிறது என்பதற்காக இந்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் புகுந்தால் சர்வதேச சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. அமெரிக்கா அத்துமீறினால் மட்டுமே சர்வதேச சமுதாயம் வேடிக்கை பார்க்கும். அமெரிக்கா செய்வதை மற்ற நாடுகள் செய்ய முடியாது என்பது தான் எழுதப்படாத விதியாகும். இலங்கையின் செயல் சர்வதேச சட்டப்படியானது என்பதால் தான் இந்தியாவால் இலங்கையை எதுவும் செய்ய இயலவில்லை.

இலங்கை அரசு இந்திய எல்லைக்குள் புகுந்து கைது செய்தால் அந்த நாட்டுக்கு எதிராகப் போர் செய்ய முடியும். தனது எல்லைக்குள் நுழைபவரைக் கைது செய்ததற்காக அந்த நாட்டை இந்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது.

இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்குத் தான் உள்ளது.

# நமது நாட்டு கடல் எல்லையைக் கடக்கும் போது மீனவர்களுக்கு சிக்னல் கொடுக்கும் கருவிகளைக் கொடுக்கலாம்.

# அல்லது நமது இலங்கையை ஒட்டியுள்ள கடலில் நங்கூரம் பாய்ச்சிய மிதவைகளை மிதக்க விடலாம்.

# அல்லது இந்திய கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் படையினரை அதிகமாக்கி நமது மீனவர்கள் எல்லை மீறிச் செல்லாமல் தடுக்கலாம்.

# அல்லது இரு நாடுகளும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி ஒவ்வொரு நாடும் ஐந்து கிமீட்டர் தூரத்தை மட்டும் தனது எல்லையாக வைத்துக் கொண்டு மீதி 20 கிமீட்டர் எல்லையை இரு நாட்டுக்கும் பொதுவானதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது யாரும் வரம்பு மீறிச் செல்லும் நிலை ஏற்படாது. மீனவர்கள் அதிக தூரம் சென்று அதிக மீன்க்ளைப் பிடிக்க இது வாய்ப்பை ஏற்படுத்தும்.

# அல்லது எல்லை மீறும் மீனவர்களைப் பிடித்து ரோந்துப் பணியில் உள்ள இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கலாம். அது போல் அத்துமீறும் இலங்கை மீனவர்களை இந்தியக் கடற்படை பிடித்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கலாம்.

# அல்லது ஒட்டு மொத்த கடல் எல்லையைப் பொதுவாக ஆக்கிக் கொண்டு தரைவழியாக அந்நிய நாட்டவர் ஊடுறுவதை மட்டும் கண்காணிக்கலாம்.

இது போல் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திப்பதை விடுத்து போலிப் போராட்டம் நடத்துவதால் எந்த நன்மையும் மீனவர்களுக்கு ஏற்படப்போவதில்லை.

இது தமிழக மீனவர்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை அல்ல. பல நாட்டவர்களும் சந்திக்கும் பிரச்சனை தான். இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடி விட்டு தாயகம் அனுப்பப்படுகின்றனர். பங்களாதேசிலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான், பங்களாதேஷ் மீனவர்கள் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் இது போன்ற கடல் எல்லை மீறல் தான் காரணம்.

எனவே இந்த விதியை மீறாமல் இருக்க நம்முடைய மீனவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அல்லது பேச்சு வார்த்தை மூலம் இரண்டு அரசுகளும் தீர்வு காண வேண்டும்.

இதை விடுத்து வெற்றுக் கூச்சல் போடுவதால் விளம்பரம் கிடைக்குமே தவிர ஒருக்காலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இது தடுக்காது, ஏனெனில் நாமே ஒப்புக் கொண்ட சட்டத்தின்படி தான் இந்தக் கைது நடவடிக்கைகள் அமைந்துள்ளன
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger