இஸ்லாம் கூறும் குடும்பவியல் (4)

Friday, November 23, 2012


குர்ஆனும் குடும்பவியலும்

குடும்ப அமைப்பை பொறுத்தவரைக்கும் அல்லாஹ்வுடைய இயற்கையான நியதி என்னவென்று சொன்னால் மனிதர்கள் குடும்பமாக வாழ வேண்டும். அதற்காகத் தான் அல்லாஹ் மனிதர்களை படைத்திருக்கிறான்.

எதற்காக ஆணிலிருந்து பெண்ணை இறைவன் படைத்தான்?

திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் “அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.” (அல்குர்ஆன் 7 : 189)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். (அல்குர்ஆன் 4 : 1)

இன்னும் பல வசனங்களில் ஆணிலிருந்து தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கூறப்படுகின்றது. எதற்காக படைக்கப்பட்டார்கள் என்று சொன்னால் அவர்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். ஆணை வேறாகவும் பெண்ணை வேறாகவும் படைத்திருந்தால் இரண்டு பேருக்கும் இடையில் தொடர்பு இருக்காது. எதற்காக இப்படி ஓர் ஆணிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தான் என்பதற்கு படைத்த அவனே காரணமும் கூறுகிறான், “இந்த ஆண் அந்த பெண்ணிடத்திலே இணைந்து அமைதி பெற வேண்டும், நிம்மதி பெற வேண்டும்”. அவன் முதலில் ஆணிலிருந்து ஆணை படைக்கவில்லை, பெண்ணிலிலருந்து பெண்ணை படைக்கவில்லை. மாறாக ஆணிலிருந்தே பெண்ணைப் படைத்துள்ளான். சந்தோஷம் அடைவதற்கான ஒரு அமைப்பாகவே ஆணிலிருந்து பெண்ணை அல்லாஹ் படைத்துள்ளான். அப்போது தான் அவர்களுக்கு மத்தியில் இணைப்பிருக்கும், அன்பு இருக்கும் என்று காரணத்தையும் சேர்த்தே சொல்கின்றான். ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் அன்பையும், கருணையையும் உருவாக்கியுள்ளான். அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைப்பானது அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரு அத்தாட்சியாக இருக்கிறது.


திருமணம் செய்யும் ஒரு ஆண், ஒரு பெண் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள், வெவ்வேறு மொழிகளைக் கூட பேசுபவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணத்தின் மூலம் அவர்கள் மத்தியில் அப்படி ஒரு அன்பு ஏற்படுகின்றது. எனவே ஒருவொருக்கொருவர் உதவுவதிலும், அரவணைப்பதிலும், கவனிப்பதிலும் ஈடுபாடு காட்டுவதைக் காணலாம். அவனுக்காக இவள் வாழ்வது, இவளுக்காக அவன் வாழ்வது போன்ற இணக்கம் உண்டாவதை அல்லாஹ் தான் ஏற்படுத்தியிருக்கின்றான்  என்று கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)

நாம் சிந்தித்தித்துப் பார்த்தோம் எனில் கணவன், மனைவி மத்தியில் ஏன் இப்படி அன்புடன் இருக்கிறார்கள்? என்பதில் நிறைய சான்றுகள் இருக்கின்றன என்று அல்லாஹ் சொல்கின்றான்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்குமிடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம். (அல்குர்ஆன் 6 : 98)

ஆணிலிருந்து பெண்ணைப் படைத்ததில் தான் அமைதி கிடைக்கும், அப்படி இருந்தால் தான் ஒருவொருக்கொருவர் ஈர்க்கப்படுவார்கள் என்ற உண்மை புலப்படுகிறது.       

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். (அல்குர்ஆன் 39 : 6)

ஆதம் (அலை) அவர்களைப் படைத்து சொர்க்கத்தில் எல்லா விதமான இன்பங்களையும் வழங்கி அங்கு தங்கவும் வைப்பதற்கு முன்னால் அவரது ஜோடியை படைத்துள்ளான்.

“ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்”. (அல்குர்ஆன் 2 : 35)
எனவே ஜோடியாகத் தான் இருவரையும் சொர்க்கத்தில் குடியமர்த்துகிறான். ரொம்ப காலம் தனிமையில் காக்க வைத்து விட்டு அவரது ஜோடியை அல்லாஹ் வழங்கவில்லை. மாறாக ஆதம் (அலை) அவர்களைப் படைத்த உடனேயே அவரது ஜோடியான ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்து விட்டான். இதிலிருந்து ஆண், பெண் என்ற முறையில் தான் உறவுகள் இருக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் நியதி விளங்குகின்றது. ஆண், பெண் என்ற முறைக்கு மாற்றமான எந்த முறைக்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இதற்று மாற்றமானதை நியாயப்படுத்தவே முடியாது. இதை ஏன் வலியுறுத்து சொல்கின்றோம் எனில் சமீபத்தில் பிரபல்யமான ஒரு வெளிநாட்டு தொலைக்காட்சி சேவையில் எவனோ ஒரு தலைப்பாகை, ஜுப்பா அணிந்த முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்து ஓரினச்சேர்க்கையை ஆதரிக்குமுகமாக ஒரு நிகழ்ச்சி காட்டப்பட்டது. இதை மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தில் இவ்வாறான ஒழுக்கக்கேடுகளுக்கு அங்கீகாரம் இருக்கின்றது, இஸ்லாம் நாசமாகி விட்டது, முஸ்லிம்களும் நாசமாகி விட்டார்கள் என்பதை காட்டுவதற்காக இப்படியான பேட்டிகளை வழங்கி இதை ஒரு செய்தியாக பிரபல்யப்படுத்துகிறார்கள்.

அல்லாஹ் ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்தை அழிப்பதாற்காக ஓரினச்சேர்க்கையை காரணமாக அமைக்கின்றான் எனில் அது எவ்வளவு பெரிய குற்றம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger