Thursday, August 25, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


உலகில் உள்ள மதங்கள் சில வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் மக்களுக்குப் போதிக்கின்றன. பெரும்பாலும் மனிதனின் அன்றாட நிகழ்வோடு தொடர்புள்ள வாழ்வியல் பிரச்சினைகளை அந்த மதங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மட்டும் தான் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒளி விளக்காக திகழ்கின்றது. விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் இந்த அறிவியல் உலகில் எழும் நவீன கால சவால்களை இஸ்லாம் தவிர வேறு மதங்களால் சமாலிக்க முடியாது .இதனால் தான் தேனடையை மொச்சும் வண்டுக்களைப் போல் இஸ்லாத்தை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் மனித வாழ்வில் சிந்தி விழும் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் அற்புத மார்க்கம். அந்த வகையில் இஸ்லாம் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக திகழும் குடும்பவியல் குறித்தும் துல்லியமாக எடுத்துறைக்கின்றது.

இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் சென்ற வருடம் (2010) மவ்லவி பீ.ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் ஆற்றிய தொடர் சொற்பொழிவு எனது தளத்தில் இன்ஷா அல்லாஹ் தொடராக வெளியிடப்படும்.

குடும்பவியலின் தாத்பரியத்தை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தனக்கே உரிய அழகிய நடையில் அனைவரும் புரியும் வகையில் மிகவும் எழிய தமிழில் இவர் எடுத்துரைக்கும் முறை தமிழ்பேசும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அதிலும் குறிப்பாக வெளிநாடுவாழ் மக்களிடம் இந்நிகழ்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கடந்த 21.08.2010 அன்று Times of india  பத்திரிக்கை முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இந்தத் தொடர் கணடா வாழ் இந்து மக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியதாக கணடாவில் அப்போதிருந்த எனது ஆசிரியர் மவ்லவி முஹம்மது (ரஹ்மானி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார். அப்போது தான் இதை நுர்லாக்க வேண்டும் என்ற  உந்துதல் எனக்கு ஏற்பட்டது.

குடும்பபொறுப்பு வாழ்வாதாரத் தேடல் பட்டப்படிப்பு என பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நான் சுழன்று கொண்டிருப்பதால் இரண்டு வாரங்களுக்குல் ஒரு தொடர் வெளியிடப்படும். இது உரை நடையில் இருப்பதால் எழுத்து நடைக்கு ஏற்றாப்போல் வடிவம் கொடுக்கப்படும். இது அல்லாஹ் நாடினால்............

 என்றும் அன்புடன் முஹம்மது கைஸான் (தத்பீகி)


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (01)இஸ்லாம் மார்க்க்தைப் பொறுத்த வரையில் அது எந்த ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் முழுமையாகவும், தெளிவாகவும், அறிவுக்குப் பொருத்தமான முறையிலும், நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் அனைத்து பிரச்சினைகளையும் அணுகக்கூடிய ஒரு மார்க்கம் ஆகும். நம்முடைய சமூகத்திலே கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அமைப்புகள் சீரழிந்து வருகின்றன. முஸ்லிம் சமுதாயமாக இருந்தாலும் மற்றைய சமூக மக்களாக இருந்தாலும் அக்குடும்பங்களுக்கு மத்தியில் நிறைய பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகின்றோம். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்று சொன்னால் இஸ்லாம் சொல்லக்கூடிய அந்தக்குடும்பவியலை, அதனுடைய சட்டதிட்டங்களை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கின்ற காரணத்தினாலும், அது அவர்களுக்கு தெளிவாக சொல்லப்படாத காரணத்தினாலும் ஆகும்.

படைப்பின் உற்பத்தி


முதலாவதாக அல்லாஹ்வுடைய படைப்புகளிலே, எந்தெந்ந படைப்புகளை அல்லாஹ் நேரடியாகப் படைத்திருக்கின்றானோ அவை எல்லாம் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வகையிலே படைத்திருக்கின்றான். ஒன்றிலிருந்து இன்னொன்றை உற்பத்தியாக்கக் கூடிய வகையிலேயே அல்லாஹ்வுடைய படைப்பு மாத்திரம் தான் இருக்கும். மனிதர்கள் எதையாவது உற்பத்தி செய்வார்கள் என்று சொன்னால் அது இன்னொன்றை உற்பத்தி செய்யாது. உதாரணத்திற்கு ஒரு பேனாவை உற்பத்தி செய்தோம் என்று சொன்னால் அந்த பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறக்காது. இன்னொன்றை தனியாகத்த தான் செய்ய வேண்டும். ஆனால் அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் ஒரு ஜோடி மனிதனை படைக்கிறான், அதிலிருந்து இத்தனை மக்கள் உருவாகியிருக்கின்றோம். அல்லாஹ் நேரடியாக ஒரு ஜோடியைத் தான் படைக்கிறான். இது போல எல்லா உயிரினங்களிலுமே ஒரு ஜோடி ஆடு, ஒரு ஜோடி மாடு என்று இப்படித்தான் அல்லாஹ் படைத்திருக்கின்றான். அது தான் பல்கிப்பெருகி பல உயிரினங்களாக வளர்ந்திருக்கிறதை நாம் பார்க்கின்றோம்.

அதே போல தாவரங்களை எடுத்துக் கொண்டாலும் கூட ஒரே ஒரு விதையிலிருந்து ஏராளமான மரங்களை அல்லாஹ் உற்பத்தி செய்யக்கூடிய அதிசயத்தை நாம் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொரு உயிரினமும் பல்கிப் பெருக வேண்டுமென்பதற்காக அவற்றுக்கு மத்தியிலே ஆண், பெண் என்ற இரண்டு இனத்தை உருவாக்க ஒன்றையொன்று கவரக்கூடிய வகையிலே அதிலே ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி அதன் மூலமாகத்தான் அல்லாஹ் உயிரினங்களை பெருகச் செய்கின்றான். ஒவ்வொரு உயிரினத்திலும் தாவரங்கள் உட்பட அவை தானாக கவரக்கூடிய தன்மை இல்லாவிட்டாலும் கூட அதிலும் ஆண், பெண் என இருக்கின்றது. பூக்களிலும் ஆண் பூ, பெண் பூ என் இருக்கின்றது. அந்த ஆண் பூ, பெண் பூ இரண்டும் இணைந்தால் மாத்திரமே பூக்கள் காய்க்க முடியும். அந்த விதமாகத் தான் எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் படைத்திருக்கின்றான்.

குடும்ப அமைப்பு


எல்லா உயிரினங்களுக்கும் அந்த ஆண், பெண் என்ற ஈடுபாட்டின் மூலமாக பெருகக் கூடியதாக இருந்தாலும் மனிதனுக்கு மாத்திரம் தான் குடும்பம் என்ற இந்த அமைப்பு இருக்கிறது. மிருகங்களுக்கு குடும்பம் என்ற ஒரு அமைப்பு கிடையாது. இவ்வாறு எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் என்ற இனம் இருந்தாலும் அவைகளுக்கு மத்தியில் குடும்பம் என்ற அமைப்பு இருக்குமா என்று கேட்டால் இருக்காது. அவைகள் இனப்பெருக்கத்துக்காக சேர்வதோடு தங்களுடைய வேலையை முடித்துக் கொள்ளும். அதற்குப் பிறகு அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை அவை சுமப்பது கிடையாது. குறிப்பாக பெண் இனம் தான் எல்லா விளைவுகளையும் சுமந்தாக வேண்டும். மிருகங்களை எடுத்துக் கொண்டால் அதன் ஆண் இனத்துக்கு எந்தவித பொறுப்பும் கிடையாது. ஆண் இனத்துக்கு சேர்ந்ததோடு அதனுடைய வேலை முடிந்துவிட்டது. பெண் இனத்திற்கு வரக்கூடிய இந்த சுமைகளில், கஷ்டங்களில் நமக்கும் பங்கு இருக்கின்றது, நாமும் அதற்குக் காரணமாக இருந்தோம் என்ற அறிவு அதற்கு இல்லாத காரணத்தால் அது அதன்பாட்டிற்கு வேறு போக்கில் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

ஆனால் மனிதன் பகுத்தறிவு உள்ள காரணத்தினால் இதைச் சிந்திக்கிறான். நாம் இனப்பெருக்கத்திற்காக சேர்ந்தாலும் இதனால் பெண்ணுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களுக்கெல்லாம் ஆண்களாகிய நாம் தான் காரணம், நாம் தான் இதற்கு பொறுப்பாளியாக இருக்கின்றோம், நாமும் இந்த சிரமத்தில் பங்கெடுத்தாக வேண்டும் என்ற ஒரு சிந்தனை பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு மாத்திரம் தான் உள்ளது. இந்த மாதிரி ஒரு நல்ல எண்ணத்தில் தான் குடும்பம் என்ற அமைப்பை மனிதன் உருவாக்குகின்றான். குடும்பம் என்ற அமைப்பு இல்லையெனில், கணவன் மனைவி என்ற கட்டுக்கோப்புக்குள் மனிதன் வாழவில்லை எனில், எவரும் எந்தவிதமாகவும் வாழலாம் என்றால் பெண்களுடைய சுமைகளை பெண்கள் மாத்திரம் தான் சுமக்க வேண்டி வரும். ஆண்கள் எந்தவிதமான பங்கையும் எடுக்க மாட்டார்கள். குறிப்பாக குடும்பம் என்ற இந்த அமைப்பு இல்லையென்று சொன்னால் பெண்கள் பயங்கரமான, பாரதூரமான துன்பங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கு தான் இந்த குடும்ப அமைப்பு என்பதாகும். ஆதம் (அலை) அவர்களுடைய காலத்திலிருந்து இந்த அமைப்பை அல்லாஹ் உருவாக்கி உள்ளான். ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவர்களுக்கு ஒரு ஜோடியைக் கொடுத்து நல்லது, கெட்டது என்பவற்றை சுமக்க வேண்டும் என்று சொல்லி, நீ தான் உன் மனைவியை பராமரிக்க வேண்டும் என்று கூறி அந்த முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிடமிருந்து அல்லாஹ் வழங்கிய அந்த குடும்ப சட்டம் தான் உலகம் முழுவதும் மனித குலத்தில் குடும்ப அமைப்பாக இருந்து கொண்டிருக்கிறது. 

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به        والأرحام إن الله كان عليكم رقيبا (1) 

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான் ( அல்குர்ஆன் 4 .1)

முதல் மனிதர் ஆதம் அலை அவர்களிடம் இருந்து அல்லாஹ் கொடுத்த குடும்ப அமைப்புத்தான் இன்று உலகம் முழுவதும் மனித குலத்திடம் இருந்து வருகிறது.

இன்ஷா அல்லாஹ் வளரும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger